Wel Come

Sunday, April 26, 2009

திரை கவிஞர்களின் காதல் கவிதைகள்.

பறக்கத் தெரியும் திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு.

***

என்னைத் தவிர
யாரிடமும் பேசாதே.
உன் இதழ்களில் நனைந்து
வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகிவிடுகின்றன.

***

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்!

***

காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!

***

கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!

***

பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு
வரக்கூடாதா?

***

சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி
எழுதத் தானோ?

***

இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்
பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்
என்பது.

***

இரவும் இரவும் சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட இரகசியமான
இடம்
உன் இதயம்.
அதனால்தான் அங்கே
என்னை நீ
என்ன செய்கிறாய்
என்றே
தெரியவில்லை.

***

உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றி
மேலும் இது சம்பந்தமான கருத்துகளை எதிர் பார்க்கின்றேன்

About Me

My photo
பெரிதாக சொல்வதிற்கு இல்ல..