
உணர்வாயா நீ…!
குமுறி எழும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் புதைத்தபடி
ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை
அடித்தடித்து சொல்லியாயிற்று
நான் உன்னை நேசிப்பதாய்.
என் இதயத்தை பிளந்து பிளந்து
எத்தனை தடவை காட்டியுமாயிற்று
உன் மீது நான் கொண்ட நேசத்தை
இதை புரிவாயா நீ….!
இந்த உலகில்
உனக்கு யாரைப் பிடிக்கும் என்று
என்னை யாரும் கேட்டால்…
என் விழிகள் இரண்டும்
உன்னை நோக்கி
கணைகளை வீசும்.
என் சுண்டு விரல் கூட
உன்னை நோக்கி நீண்டு
உன்னையே சுட்டிக் காட்டும்.
எப்போதாவது
என் நேசத்தை
புரிந்து கொண்டாயா நீ….?
உனக்கெங்கே
இந்த ஏழையின்
நேசமும், பாசமும்
புரியப் போகின்றது…?
விடியலுக்கு முந்திய
அந்த இருட்டினிலே
விழி நிறைந்த கனவுகளுடன்
நாம் சிரித்து மகிழ்ந்திருந்த
அந்தக் கணப் பொழுதுகள்
இன்னும் என் உயிரோடு ஒட்டி
உணர்வோடு ஊசலாடிக் கொண்டே இருக்கிறது.
உனக்குள் நான் தொலைந்திருக்கிறேன்
இனியாவது தேடிக் கொள்வாயா…?
உன் நினைவில் நான்
கரைந்து போனது மட்டுமல்ல
உறைந்தே போயிருக்கின்றேன்
இதை உணர்வாயா நீ…?
நட்போடு வலம் வரும் இவன்
Siva
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கு நன்றி
மேலும் இது சம்பந்தமான கருத்துகளை எதிர் பார்க்கின்றேன்